பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களை கண்டித்து, 35 லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் இன்று இரவு ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் சிமெண்ட் ஆலைகளுக்குத் தேவையான சுண்ணாம்புக் கல் உள்ளிட்ட மூலப் பொருள்களை, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்துக்குள்பட்ட வரகுபாடி, காரை உள்ளிட்ட கிராமங்களில் டிப்பர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்தக் கல் குவாரிகளுக்கு அரியலூரிலிருந்து பெரம்பலூர்- ஆலத்தூர் கேட் வழியாக சென்று மூலப் பொருள்களை கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அரியலூரிலிருந்து வரும் டிப்பர் லாரிகள் அனைத்தும் கூத்தூர், பிலிமிசை, இலுப்பைக்குடி, சாத்தனூர், வரகுபாடி வழியாக இயக்கப்படுவதால், இந்த வழித்தடத்தில் சாலைகள் சேதமடைவதோடு, மாசு ஏற்பட்டு அடிக்கடி சாலை விபத்துகள் நிகழ்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர், வருவாய்த் துறையினரிடம் பலமுறை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்நிலையில், இன்று மாலை இலுப்பைக்குடி கிராமம் வழியாக மூலப்பொருள்கள் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி ஒன்று, சாலை ஓரத்தில் சென்ற ஆடுகள் மீது மோதியதில் ஒரு ஆடு இறந்தது.
இதையறிந்த, அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் வாகனங்களை இயக்க வலியுறுத்தி அவ்வழியே வந்த 35 டிப்பர் லாரிகளை சிறைபிடித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த அதிகாரிகள் அங்கு சென்று, பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடைப்ட்டது.