சென்னை: இடைத் தேர்தல் நடைபெறும் ஆர். கே., நகரில் வாக்குச்சாவடிகளில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெறுகிறதா என்று டிராபிக் ராமசாமி காரில் சென்று பார்வையிட்டு வருகிறார்.
தண்டையார்பேட்டையில் டிராபிக் ராமசாமி சென்ற கார் மீது அதிமுக-வினர் தாக்குதல் நடத்தினர். காரைவிட்டு வெளியில் வந்த டிராபிக் ராமசாமியிடம் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார், சமாதானம் செய்து டிராபிக் ராமசாமியை அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். அதிமுகவினர், வாகனங்களில் வாக்காளர்கள் அழைத்து வந்து ஓட்டு போட வைக்கின்றனர் என்று அவர் குற்றம் சாட்டினார்.
தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் செல்லாது என அறிவிக்க கோரி வழக்கு தொடர உள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார். தன்மீது தாக்குதல் நடத்தியவர்கள் பற்றி போலீசிடம் புகார் அளிக்க சென்றால் தன்னை அனுப்புவதிலேயே குறியாக உள்ளனர் என்றும் டிராபிக் ராமசாமி குற்றம் சாட்டியுள்ளார்.