பெரம்பலூர் அருகே கிணற்றுக்குள் விழுந்த புள்ளிமானை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் உயிருடன் மீட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அருகே உள்ள தேவையூர் கிராமத்தில் நவாப்ஜான் என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள கிணற்றில் ஒன்றரை வயதுள்ள ஆண் புள்ளிமான் ஒன்று தத்தளிப்பதாக நேற்று காலை 8.30 மணியளவில் பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் வந்தது.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையில், பணியாளர்கள் செந்தில்குமார், அங்கமுத்து, சரவணன், தனபால், பால்ராஜ் ஆகியோரை கொண்ட குழுவினர் கிணற்றுக்குள் கயிறாலான வலை மூலம் மானை மீட்டனர். மானின் உடலில் தலையில் லேசான காயம் இருந்தது. இதற்கு வனத்துறையினர் கால்நடை டாக்டர்கள் மூலம் சிகிச்சை அளித்தனர். பின்னர், ரஞ்சன்குடி அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனர்.