பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் அருகே உள்ள விசுவகுடி நீர்த் தேக்கத்தின் நீர்மட்டம் 16 அடியாக உயர்ந்துள்ளது. புதிய அணை என்பதால் அணையின் பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்றப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் ஊராட்சி விசுவகுடியில் கல்லாற்றின் குறுக்கே பச்சமலையையும், செம்மலையையும் இணைத்து ரூ.33 கோடி மதிப்பீட்டில் புதிய அணைக்கட்டப்பட்டுள்ளது. இந்த அணை கட்டுமானப்பணியின் பெரும்பகுதி முடிந்து தற்போது பெய்து வரும் பருவ மழைநீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதன்முதலாக அணையில் தேக்கி வைக்க உத்தரவிட்டனர். 33 அடி உயரம் கொள்ளளவு கொண்ட அணையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் 15 அடி உயரத்திற்கு நீர் தேங்கியுள்ளது.
புதிய அணைக்கட்டு என்பதால் அணையின் பாதுகாப்பு கருதி படிப்படியாக நீரை தேக்கி வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி நேற்று பெய்த கனமழையினால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. மாலை நிலவரப்படி 16 அடி உயரம் நீர்தேங்கியிருந்தது. மேலும் அணைக்கு வரக்கூடிய முழு தண்ணீரையும் தேக்கி வைக்காமல் பெரும் பகுதி நீரை கல்லாற்றில் வெளியேற்றினர். இந்த தண்ணீர் வெங்கலம் பெரியஏரிக்கு வந்துகொண்டு இருக்கிறது. புதியதாக கட்டப்பட்டுள்ள அணை என்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.