பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவில், கல்லாற்றின் குறுக்கே பொதுப்பணித்துறை சார்பாக செம்மலை, பச்சமலை ஆகியமலைகளை இணைத்து விசுவக்குடி நீர்த்தேக்கம் அமைக்கும் பணி நடந்துவருகிறது. இந்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமைப்பொறியாளர், அசோகன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது:
இந்த நீர்த்தேக்கம் மூலம் கல்லாற்றின் நீர் வீணாகாமல் தடுத்து விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவைகளுக்குப் பயன்படுத்தும் வகையில் முதல்கட்ட பணியாக ரூ.19 கோடியில் 665 மீட்டர் நீளமுள்ள கரையுடன் கூடிய கட்டுமானப்பணிகள் நடந்துவருகிறது.
இந்த அணைக்கட்டு மூலம் 30.67 மில்லியன் கன அடி தண்ணீரை 10 மீட்டர் ஆழத்திற்கு சேமிக்க இயலும். இதற்காக அணையின் நீர்ப்போக்கியை அமைத்திட 11 மீட்டர் உயரத்திற்கு கான்கிரிட்டால் ஆன பலமான கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது. நீர்போக்கியின் இருபுறமும் மலையுடன் இணைக்கும் வகையில் 12 மீட்டர் உயரத்திற்கு கரைகள் அமைக்கப்பட்டு மண்அரிப்பு ஏற்படாதபடி கருங்கல் பதிக்கும் பணிகள் முடிவுற்றது.
நீர்த்தேக்கம் அமைக்கும் பணிக்காக 2 -ம் கட்டமாக மறு மதிப்பீட்டின்படி ரூ. 14.07 கோடி நிதி பெறப்பட்டது. இந்த நீர்த்தேக்கம் மூலம் நேரடியாக 859 ஏக்கர் புன்செய் நிலம் பாசன வசதிபெறும். மேலும் மதகுகளின் மூலம் வெங்கலம் பெரிய ஏரிக்கு கீழுள்ள சுமார் 421.41 ஏக்கர் ஆயக்கட்டிற்கான நீராதாரம் உறுதி செய்யப்படும். நிலத்தடி நீர் செறிவூட்டப்படுவதால் கிணற்றுப்பாசனம் மூலம் கூடுதலாக 169 ஏக்கர் புன்செய் நிலங்களும் பாசன வசதி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதோடு மறைமுகமாக 2 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதிபெறும்.
இந்த அணையை அன்னமங்கலம் வழியாக நேரில் வந்து பார்பதற்காக விசுவக்குடியிலிருந்து 1.20 கி.மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கப்பட்டுவருகிறது. அணையின் திட்டப்பணிகளின்படி தேக்கப்படவுள்ள 30.67 மில்லியன் கன அடி நீருடன், உட்பகுதியில் ஆழப்படுத்துவதன் மூலம் மேலும் 10 மில்லியன் கன அடி நீரை சேமிக்க மாவட்ட ஆட்சியர், சமச்சீர் வளர்ச்சி நிதி ஒதுக்கீடு செய்து நடைப்பெற்று வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத்தலமாக இந்த அணையை உருவாக்கும் வகையில் அணையின் முன்புறத்தில் பிரமாண்ட பூங்காவும், அணையின் கரையில் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை அமைக்கவும், அணையைப் பார்க்க பொது மக்கள் வரும் வகையில் தொண்டமாந்துறை வழியாக புதிதாக ஒருசாலை அமைத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் முலம் பயன்பெறும் 1449.41 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவித்தார்.
பின்னர், பாசன வாய்க்கால் வெட்டும் பணிகளை உடனே துவங்கிட வேண்டுமென்று கூறிய தலைமைப் பொறியாளர் மதகு (Radial gate) அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டதுடன் அவற்றை விரைந்து முடிக்க தேவையான தொழில் நுட்ப ஆலோசனைகளையும் வழங்கினார்.
மேலும், இந்த பருவமழையினால் கிடைக்கும் தண்ணீரை அணையில் தேக்க நடவடிக்கை எடுக்கவும், மேலும் வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் பணிகளை நிறைவு செய்யும் வகையில் துரிதமாக பணிகளை முடிக்க வேண்டுமென்று பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.
இந்த நீர்த்தேக்கம் மூலம் பயன்பெறும் தொண்டமாந்துறை விசுவக்குடி அன்னமங்கலம் பகுதி விவசாய பெருமக்களுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகளை கேட்டறிந்து அதற்கேற்ற ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.
இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.