மிஷன் இந்திர தனுஷ் திட்டத்தின் மூலம் விடுப்பட்ட மற்றும் தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான தடுப்பூசி முகாம் 7 நாட்கள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது தகவல் தெரவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நாடு முழுவதும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை 90 சதவிகிதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்திடும் நோக்கில் நவம்பர், டிசம்பர், மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் 7ம் தேதி முதல் தொடர்ந்து 7 வேலை நாட்கள் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமின் முதல் நாளன்று துணைசுகாதார மையங்களில் தொடங்கி, அதனை தொடாந்து அடுத்தடுத்து கிராமங்களில் உள்ள அங்கன்வாடிமையங்களில் நடைபெறும். அரசு தலைமை மருத்துவமனைகளிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொடர்ந்து 7 வேலை நாட்களிலும் விடுபட்ட அனைத்து குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்படும்.
கடந்த நவம்பர் 15 மாதத்தில் நடைபெற்ற முகாமில் 2,635 குழந்தைகள் மற்றும் 632 கர்ப்பிணிகள் தடுப்பூசி போடப்பட்டு பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
இந்த முகாமில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு இரணஜண்ணி தடுப்பூசியும், குழந்தைகளுக்கு காசநோய்தடுப்பூசி, இளம் பிள்ளைவாத சொட்டுமருந்து, பென்டாவேலன்ட் தடுப்பூசி (கக்குவான், தொண்டைஅடைப்பான், இரணஜன்னி, மஞ்சள்காமாலை (வைரஸ் டீ தடுப்பு) இன்புளுயன்சா போன்றவை), தட்டம்மைதடுப்பூசி, மூளைக்காய்ச்சல் தடுப்பூசி, முத்தடுப்பு, போன்ற தடுப்பு ஊசி மருந்துகள் இந்தமுகாமில் போடப்படும் .
இந்த முகாமில் 0 முதல் 2 வயதுள்ள குழந்தைகளுக்கும் மற்றும் கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி ஏதும் விடுபட்டிருந்தால் அந்த குழந்தைகளுக்கும், கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் இந்த முகாமில் தடுப்பூசிபோடப்படும்.
மேற்கண்ட முகாம்களில், பிறந்த குழந்தைகளுக்கு எந்தெந்த தேதிகளில் என்ன தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என்பது குறித்தும் விரிவான தகவல் தெரிவிக்கப்படும். அதன்படி பிறந்த குழந்தைகளுக்கு பிசிஜி, போலியோ சொட்டுமருந்து, பிறந்த 24 மணிநேரத்திற்குள் போடப்படும் ஹெப்படைட்டிஸ் பி தடுப்பூசிகளும், 6 வாரக்குழந்தைகளுக்குபென்டா-1பிளஸ் போலியோ சொட்டுமருந்தும், 10வாரக் குழந்தைகளுக்கு பென்டா-2 பிளஸ் போலியோ சொட்டு மருந்தும், 14 வாரக் குழந்தைகளுக்கு பென்டா-3 பிளஸ் போலியோசொட்டுமருந்தும போடப்பட உள்ளது.
9 வது மாதம் (பிறந்து 270 நாட்கள்முடிந்து) தட்டம்மை முதல் தவணை, மூளைக்காய்ச்சல் முதல் தவணைகளும், 16 முதல் 24 வது மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு டிபிடி ஊக்குவிப்பு, போலியோ சொட்டுமருந்து, தட்டம்மை 2வது தவணை, மூளைக்காய்ச்சல் 2வது தவணைகளும், 5 முதல் 6 வருடம் உள்ள குழந்தைகளுக்கு டிபிடி 2வது ஊக்குவிப்புகளும் வழங்கப்பட உள்ளன.
எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.