பெரம்பலூர் : நடைபெறவுள்ள சட்டமன்றப்பொதுத் தேர்தலில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட ஏற்கனவே பறக்கும் படை, தீவிர கண்காணிப்புக்குழு, வீடியோ சர்வைலன்ஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்புப் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
பெரம்பலூர் சட்ட மன்றத் தொகுதிக்கு புதியதாக 11 பறக்கும் படை குழுக்களும், குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கு 10 பறக்கும் படை குழுக்கள் என மொத்தம் 21 புதிய பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே தொகுதிக்கு 6 பறக்கும் படை வீதம் இரு தொகுதிகளிலும் சேர்த்து 12 பறக்கும் படை குழுக்கள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடதக்கது.
இந்த புதிய குழுவில் இடம் பெற்றுள்ளவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான க.நந்தகுமார் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது:
நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் பறக்கும் படை மற்றும் தீவிர கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தொடர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டமன்ற தேர்தலையொட்டி அசம்பாவிதங்கள் மற்றும் குற்ற செயல்கள் ஏதும் ஏற்படாத வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்ட பேரவைத் தொகுதிக்கு ஏற்ப்படுத்தப்பட்ட மண்டல அலுவலர்களை கொண்டு இந்த இரண்டு தொகுதிகளிலும் தலா 11 புதிய பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுவின் செயல்பாடுகளை உடனடியாக இன்று இரவு முதல் செயல்படுத்த வேண்டும்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்தபட்ச நாள்களே உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் தேர்தல் விதிமுறைமீறல்கள் நடைபெறாமல் தடுக்க மேலும் 22 பறக்கும் படை குழு, மண்டல அலுவலர்களை தலைவர்களாக கொண்டு செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் மண்டல அலுவலர், மண்டல உதவியாளர், காவலர் மற்றும் உதவியாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.
மேலும் இக்குழுவினர் பெரம்பலூர் மற்றும் குன்னம் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பணம் வினியோகம், மது வினியோகம் உள்ளிட்ட குற்ற செயல்கள் நடைபெறுகின்றனவா என்று தீவிர கண்கானிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும்.
மேலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைகளிலிருந்து பெறப்படும் புகார்கள் மீதும் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும், என தெரிவித்தார்.