பெரம்பலூரில், விபத்து நஷ்ட ஈடு வழங்காத அரசுப் பேருந்து இன்று ஜப்தி செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பாலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் கணபதி. இவர், கடந்த 23.9.2010-ல் இருசக்கர வாகனத்தில் பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் சென்றபோது, அவ்வழியே சென்ற அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதுதொடர்பாக, பெரம்பலூர் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் விபத்து நஷ்ட ஈடு கோரி கணபதி வழக்குத் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 13.8.2013 ஆம் தேதி திருச்சி அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக மேலாளர் ரூ. 3,39,591 வட்டித் தொகையுடன் மனுதாரருக்கு வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது.
நீதிமன்றம் உத்தரவிட்டும் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீட்டுத் தொகையை அரசுப் போக்குவரத்துக் கழகம் செலுத்தாததால், பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கணபதி நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ. நசீமா பானு, பாதிக்கப்பட்ட நபருக்கு வட்டியுடன் சேர்த்து ரூ. 4,80,757 செலுத்தவும், அரசுப் பேருந்தை ஜப்தி செய்யவும் அணஅமையில் உத்தரவிட்டார். அதன்படி, மாவட்ட நீதிமன்ற அமீனா புதிய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அரசுப் பேருந்தை இன்று ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தார். அதைத்தொடர்ந்து, மொத்த நஷ்ட ஈட்டுத் தொகையை செலுத்தும் வரை, அப்பேருந்தை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்க மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ. நசீமா பானு உத்தரவிட்டார்.