வியபாரிகள் முத்திரை இல்லாத தராசு மற்றும் எடை கற்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன் தராசும் பறிமுதல் செய்யப்படும் – தொழிலாளர் ஆய்வாளர் தகவல்.
பொதுமக்களுக்கு வியபாரம் செய்யும் பொருள்களை எடைபோட பயன்படுத்தும் வியபாரிகள் முத்திரையிடப்பட்ட தராசு மற்றும் எடை கற்களை பயன்படுத்த வேண்டும்.
முத்திரையிடப்படாத தராசு மற்றும் எடை கற்களை பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். அதனடிப்படையில் இன்று காலை 8.00 மணியளவில், பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில்; அமைந்துள்ள உழவர் சந்தையில் மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், முத்திரைஆய்வாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.
வியாபாரிகள் பயன்படுத்திய மேசை தராசுகள், எடைக்கற்கள், முத்திரையிடப்பட்டுத்தான் பயன்படுத்தப்படுகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது. உழவர் சந்தையில் உள்ள 50 கடைகளில், 49 மேசை தராசுகள் மற்றும் எடைகற்கள் அனைத்தும், முத்திரையிடப்பட்டுள்ளது. எஞ்சிய 1 தராசு பழுதடைந்துள்ளதால், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக கண்டறியப்பட்டது.
எடையளவு சட்டம் 2009- ன் படி முத்திரையிடப்படாமல் எடைக்கற்களை பயன்படுத்துவது குற்றம் என்றும், முத்திரை இல்லாமல் எடையளவுகளை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் எடையளவு கருவிகளை பறிமுதல் செய்வதுடன்; ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும் வியாபாரிகளுக்கு அறிவுரை செய்யப்பட்டது.
எனவே அனைத்து வியாபாரிகளும் உரிய காலத்தில் எடையளவு கருவிகளை முத்திரையிட்டு கொள்ள வேண்டும் என தொழிலாளர் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.