பெரம்பலூர் : விளையாட்டு மைதானத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்திற்கு மாவட்ட நிர்வாகம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வீடுகளில் கருப்பு ஏற்றி பொது மக்கள் போராட்டம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நன்னை கிராமத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயன் பெறும்வகையில் 1985ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் கைத்தறி நெசவு கூடம் ஆரம்பிக்கப்பட்டது.
நாளடைவில் நெசவுகூடம் சரி வர இயங்காததால் மூடப்பட்டது. இதனையடுத்து கட்டிடம் பழுதடைந்து கைத்தறி நெசவு கூடம் ஆடு,மாடு கட்டும் கால்நடைகள் தொழுவமாக மாறியது. கைத்தறி கூடாரத்தை சுற்றியுள்ள திறந்தவெளியை அப்பகுதி சிறுவர்கள் உள்ளிட்ட இளைஞர்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் கைத்தறி கூடம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் அப்போதைய கலெக்டர் தரேஷ் அஹமது மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் பல லட்ச ரூபாய் செலவில் சம்மந்தப்பட்ட கைத்தறி நெசவு கூடத்தை புதுப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் அப்பகுதி பெண்கள் வேலைவாய்ப்பு பெற்று பயன் பெறும் வகையில் தனியார் ஏற்றுமதி ஆடை தயாரிப்பு நிறுவனத்திற்கு கட்டிடத்தை வாடகைக்கு விட முன் வந்தது.
இதனிடையே அந்த நெசவுகூடத்தின் ஒரு பகுதியில் இருந்த விளையாட்டு மைதானத்தை தடை செய்யும் வகையில் காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டிருப்பதோடு, ஒரு அரசியல் கட்சியின் விளம்பர பலகையும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நன்னை ஊராட்சி நிர்வாகம்அகற்றி அப்புறப்படுத்தியது.
இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொந்தமான இடத்தை தனியாருக்கு எப்படி கொடுக்கலாம் என்றும் திறந்த வெளியை விளையாட்டு மைதானமாக பயன்படுத்த முடியாமல் சுற்றுசுவர் எழுப்பட்டிருப்பதை சுட்டிகாட்டியும் இதற்கு உறுதுணையாக செயல்பட்ட நன்னை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து விளம்பர தட்டி வைத்தும், தங்களின் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பு செய்வதாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த குன்னம் போலீசார் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடந்தினர். அதிகாரிகளின் சமரசத்தை ஏற்க மறுத்த அப்பகுதி பொது மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.