பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ. 28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்த உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது பேசியது:
மாவட்ட ஆட்சியரின் நிதி, பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நிதி மூலம் ரூ. 28 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த நவீன உடற்பயிற்சி கூடத்தில் குளிரூட்டப்பட்ட வசதி செய்யப்பட்டுள்ளது.
கிராஸ் சைக்கிள் எந்திரம், கிராஸ் டிரையினர்ஸ் எந்திரம், மல்டி ஜிம் எந்திரம், வெர்டிகல் க்னீ ரைஸ் கருவி, ஒலிம்பிக் ராடு, பல்வேறு எடை அளவுள்ள தம்பிள்ஸ்கள், மெடிசன் பால்ஸ், ஜிம் பால்ஸ், பிளாட் இன்கிளைன் பிரன்ச் பிரஸ் எந்திரம், கேபிள் கிராஸ் ஓவர் எந்திரம் என்பன உள்ளிட்ட உடல் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் பலதரப்பட்ட எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த எந்திரங்களில் பயிற்சி செய்யும் நேரம், உடலில் எரிக்கப்படும் கலோரி அளவுகள், நடை பயிற்சி மேற்கொண்டால் எவ்வளவு தூரம் கடந்தோம் என்பதை காட்டும் நவீன டிஜிட்டல் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், பெரம்பலூர் மாவட்டத்தில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர்கள் தங்களது உடல் திறனை மேம்படுத்தி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தும் வாய்ப்பை உருவாக்க இந்த உடற்பயிற்சிக் கூடம் அடிப்படையானதாக அமையும்.
தற்போது மாவட்ட விளையாட்டு அரங்கில் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம், பாதுகாப்புடன் கூடிய வாலிபால் விளையாட்டு அரங்கம், நவீன நீச்சல் குளம், கூடைப்பந்து விளையாட்டு மைதானம், டென்னிஸ் விளையாட்டு மைதானம் ஆகியவற்றுடன் விளையாட்டு வீரர்களின் ஆர்வத்தை ஈர்த்துள்ள பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நவீன உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. இதை, இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பேசினார்.
இவ்விழாவில், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.பி. மருதராஜா (பெரம்பலூர்), மா. சந்திரகாசி, பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்செல்வன், நகர்மன்றத் தலைவர் சி. ரமேஷ், துணைத்தலைவர் ஆர்.டி. ராமச்சந்திரன், ஒன்றியக்குழுத் தலைவர்கள் து. ஜெயக்குமார், என். கிருஷ்ணகுமார், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ம. ராமசுப்பிரமணிய ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.