பெரம்பலூர், ஜூன் 27: விளையாட்டு விடுதிகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு மாநில அளவில் நடைபெறவுள்ள தேர்வு போட்டியில் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் (பொ) ப. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கேற்ப உரிய பயிற்சி மற்றும் தங்குமிட வசதி, சத்தான உணவுடன் கூடிய 28 விளையாட்டு விடுதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த விளையாட்டு விடுதிகளில் காலியாக உள்ள விளையாட்டுகளுக்கு மாநில அளவிலான தேர்வு போட்டிகள் நடைபெற உள்ளது.
அதன்படி தடகளம், கைப்பந்து, வளைகோல் பந்து, இறகு பந்து மற்றும் நீச்சல் ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் சேர விரும்பும் 7, 8, 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கும், கூடைப்பந்து விளையாட்டில் 11 ஆம் வகுப்பு மட்டும் பயிலும் மாணவர்களுக்கும் மாநில அளவில் தேர்வு போட்டிகள் நடைபெற உள்ளன. அதேபோல, தடகளம், இறகுபந்து, கைப்பந்து, கையுந்து பந்து, வளைகோல் பந்து மற்றும் கபடி ஆகிய விளையாட்டுகளுக்கு 7, 8, 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கான மாநில அளவிலான தேர்வு போட்டிகளும் நடைபெற உள்ளன.
இருபாலருக்குமான தேர்வுப் போட்டிகள், மதுரையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கில் ஜூலை 3 ஆம் தேதி காலை 8 மணியளவில் நடைபெற உள்ளது.
மேலும், கிரிக்கெட் விளையாட்டில் 7, 8, 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் ஜூலை 3 ஆம் தேதி காலை 8 மணியளவில் தேர்வு போட்டிகள் நடைபெறும்.
பளு தூக்குதல் விளையாட்டில் 7, 8, 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு தஞ்சாவூரில் உள்ள அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் ஜூலை 3 ஆம் தேதி காலை 8 மணியளவில் தேர்வு போட்டிகள் நடைபெற உள்ளது.
இருபாலருக்குமான வாள் சண்டை விளையாட்டில் 7, 8, 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் ஜூலை 3 ஆம் தேதி காலை 8 மணியளவில் தேர்வு போட்டிகள் நடைபெறும்.
மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த விளையாடடுகளில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் அதற்கான உரிய படிவங்களை www.sdat.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து, படிவத்திற்கான கட்டணம் ரூ. 10ஐ நேரடையாக தேர்வு நடத்தும் அலுவலரிடம் செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 7401703516 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.