பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகளவில் பயிரிடப்படும் மக்காசோளம் மற்றும் பருத்தியில் உற்பத்தி திறனை பெருக்கவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்திடவும் நமது மாவட்டத்தில் மக்காச்சோளம் மற்றும் பருத்தியில் தலா 1000 ஹெக்டரில் செயல் விளக்கப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது.
குன்னம் பகுதியில் தங்கவேல் என்பவரின் பருத்தி செயல்விளக்கம், ராஜூ, ன்பவரின் மக்காச்சோள செயல்விளக்கம் மற்றும் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பண்ணை திட்ட பயனாளியான ராஜா, ஆகியோரின் வயல்களை இன்று மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது ஆய்வுசெய்து பின் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஒரு ஹெக்டரில் 10 டன் மகசூல் பெறவும், பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் ஒரு ஹெக்டரில் 25 குவிண்டால் மகசூல் பெறவும் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்தெடுக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் வேளாண் அறிவியியல் மையம், வாலிகண்டாபுரம் மற்றும் பருத்தி ஆராய்ச்சி நிலையம் வேப்பந்தட்டையிலிருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பேராசிரியர்கள் மூலம் 10.08.2015 முதல் 19.08.2015 வரை குறுவட்டாரம் வாரியாக பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் மண் மாதிரிகள் எடுப்பதன் முக்கியத்துவம், மண் ஆய்வுப்படி உரமிடல், நுண்ணூட்டச்சத்து மற்றும் உயிர் உரங்கள் முக்கியத்துவங்கள், ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்தல், நோய் மற்றும் பூச்சி மேலாண்மை மற்றும் மக்காச்சோள சாகுபடியின் மேம்படுத்தப்பட்ட நுணுக்கங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
இத்திட்டத்தில் தேர்தெடுக்கப்பட்ட மக்காசோள விவசாயிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம்-தானிய பயிர்கள் திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டருக்கு ரூ.4000-ம் மற்றும் பருத்தி விவசாயிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம்-பருத்தி ஊடுபயிர்-பயறு திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டருக்கு ரூ.7500-ம் மானியம் வழங்கப்படவுள்ளது.
மேலும் இத்திட்டத்தின் மூலம் பயிருக்கு தேவையான திரவ உயிர் உரம், நுண்ணூட்டக்கலவை போன்ற இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட்டது. மீதமுள்ள மானியத்தொகைக்கு விவசாயிகள் செலவு செய்ததற்கான ரசீது செலுத்தும் பட்சத்தில் பின்னேற்பு மானியமாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும், என மாவட்ட ஆட்சியர் பேசினார்.
மேலும் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) அய்யாசாமி, வேளாண்மை துணை இயக்குநர் (பொ) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆறுமுகம், வேளாண்மை உதவி இயக்குநர்கள், வேளாண்மை அலுவலர்கள் மற்றும் துணை வேளாண்மை அலுவலர்கள் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள செயல்விளக்கத்தளைகளை வயலாய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிச்சாமி மற்றும் வேளாண்மை அலுவலர்கள் உடனிருந்தனர்.