வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து நிலவும் வெயில் காரணமாக அடிக்கடி ஏற்படும் வெப்ப சலனம் மழையை கொடுத்து வருகிறது. கடந்த வாரம் வெப்ப சலனம் காரணமாக வளிமண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட காற்று சுழற்சி வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்தது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
அதிகபட்சமாக நேற்று சத்தியமங்கலத்தில் 12 செ.மீ, பாம்பன் 11, பவானிசாகர் 9, நாங்குநேரி 8. தொண்டி, மதுரை விமான நிலையம், போடி நாயக்கனூர் தலா 7 செ.மீ., பேச்சிபாறை, கமுதி, தாராபுரம், சூலூர் தலா 6 செ.மீ, உடுமலை பேட்டை, இளையான்குடி, நத்தம் தலா 5 செ.மீ., குன்னூர், நாகர்கோவில், ராமேஸ்வரம், வால்பாறை, கரூர், பொள்ளாச்சி தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், வளி மண்டல மேல் அடுக்கில் உருவான காற்று சுழற்சி தற்போது தமிழக கடலோரத்தில் நிலை கொண்டுள்ளது.
இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னை மாநகரை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுமென்றும், ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.