பெரம்பலூர் : முன்னாள் குடியசு தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல்கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்டததில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. ஷேர் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
கிராமங்கள் தோறும் கடைகள் அடைக்கப்பட்டு , வீடுகள் தோறும் கருப்பு கொடிகள் கட்டி துக்கத்தை தெரிவித்தனர்.
மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல்காலமிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வணிகர் சங்கம், ஓட்டல் சங்கம், ரசிகர் மன்றம், ஆட்டோ சங்கம், நகை ஆசாரியர் சங்கம், தொண்டு நிறுவனம் உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது.
பெரம்பலூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை, பெரம்பலூர் மாவட்ட ஓட்டல்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், அனைத்து நடிகர்களின் ரசிகர் மன்றத்தினர், அரசு ஊழியர் குடியிருப்பு சங்கத்தினர், மோட்டார் மெக்கானிக்குகள், பல்வேறு தொழில்களை சார்ந்தவர்கள் , பல்வேறு அமைப்புகளின் சார்பில் பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டிலிருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் காந்தி சிலை வரை மவுன அஞ்சலி ஊர்வலம் நடத்தினர்.
மேலும் வளர்பிறை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளி மாணவ, மாணவிகள் பாலக்கரை பகுதியில் அவரது உருவ படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்காலமிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், பாடாலூர், வாலிகண்டபுரம், அரும்பாவூர், பூலாம்பாடி, குரும்பலூர், செட்டிக்குளம், அம்மாபாளையம், குன்னம், வேப்பூர், ஆலத்தூர், எறையூர், லப்பைக்குடிக்காடு உட்பட பல்வேறு நகரங்கள் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள அனைத்துவிதமான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.
பெரம்பலூர் நகரிலிருந்து இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்கள் அனைத்தும் இயங்கவில்லை. கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாலும், ஷேர் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயங்காததால் பெரம்பலூர் மாவட்ட சாலைகள், கடைவீதிகள், பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.