பெரம்பலூர், அக். 12: பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அருகே கால்நடைகளின் உயிரிழப்புக்கு காரணமான வெறி நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமதுவிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பி. ரமேஷ் தலைமையிலான விவசாயிகள் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பகுதியில் வசிக்கும் விவசாயிகளுக்கு மூலக்காடு ஆலடியான் கோயில் செல்லும் வழியில் விவசாய நிலங்கள் உள்ளது. இங்கு, விவாசாயப் பயிர்கள் சாகுபடி செய்வதோடு ஆடு, மாடுகள் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி வயல்பகுதிகளில் கட்டப்பட்டிருந்த கால்நடைகளை சில வெறி நாய்கள் கடித்தது. தற்போது 48 நாள்கள் நெருங்கிய நிலையில் வெறிநாய்கள் கடித்ததற்கான அறிகுறிகள் தெரியவந்துள்ளது.

இதையறிந்த விவசாயிகள், அங்குள்ள தனியார் கால்நடை மருந்தகத்தின் மூலம் மருந்துகள் பெறப்பட்டு வாரத்துக்கு ஒரு ஊசி போட்டு வருகிறோம். கடந்த ஒரு வாரமாக வெறிநாய் கடித்ததின் தாக்கம் அதிகமாகியுள்ளது. மேலும், கணேசன், செல்லமுத்து மகன் செந்தில், பிச்சைபிள்ளை, பச்சமுத்து மகன் தங்கராசு, பச்சமுத்து மகன் முத்துசாமி, உய்யகொண்டான், பச்சமுத்து மகன் கருப்பையா, சின்னசாமி ஆகியோரது பசு மாடுகள் உயிரிழந்தன. மேலும், 10க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வெறிநாய் கடித்து உயிரிழந்த பசு மாடுகளுக்கு தலா ரூ. 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். குரும்பலூர் பகுதியில் கால்நடை மருத்துவர்கள் மூலம் கால்நடைகளை பரிசோதனை செய்து, இதர கால்நடைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும்.

குரும்பலூரில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தில் தேவையான அளவு நாய் மற்றும் விஷக்கடி மருந்துகள் இருப்பு வைத்து, தனியார் மருந்தகங்களிலிருந்து மருந்து வாங்கி வரச்சொல்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!