பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
குளிக்க சென்ற போது கிணற்றில் தவறி விழுந்த மாணவன் சாவு:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகக்குமார் மகன் தமிழ்செல்வன் (12). இவர், அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 ஆம் படித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை அந்த கிராமத்தில் உள்ள சரவணனுக்கு சொந்தமான கிணற்றில் குளிக்க சென்றபோது, தவறி விழுந்த தமிழ்செல்வன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்த பாடாலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவனின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது தாய் கவிதா (33) அளித்த புகாரின்பேரில், பாடாலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்புலட்சுமி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தூக்கிட்டு முதியவர் தற்கொலை:
திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள புரத்தாக்குடியை சேர்ந்தவர் ச. ஆசிர்வாதம் (70). இவர், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள அன்னமங்கலம் கிராமத்தில் உள்ள அவரது மகள் ஆரோக்கியமேரி வீட்டுக்கு சென்றிருந்தாராம். இந்நிலையில், அன்னமங்கலம் கிராமத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது இன்று காலையில் தெரியவந்தது. தகவலறிந்த அரும்பாவூர் போலீஸார் முதியவரின் உடலை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆரோக்கியமேரி (40) அளித்த புகாரின்பேரில், அரும்பாவூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.