பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில், வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் விஷம் குடித்து வியாழக்கிழமை இன்று தற்கொலை செய்துகொண்டனர்.
பெரம்பலூர் அருகே உள்ள மேலப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் பெ. ராஜேந்திரன் (65). இவருக்கு, அடிக்கடி வயிற்றுவலி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று ஏற்பட்ட வலியால் மனமுடைந்த ராஜேந்திரன் விஷம் குடித்தார். பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார்.
இதுகுறித்து, பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கோவில்பாளையத்தை சேர்ந்தவர் செல்வகுமார் மனைவி சுமதி (22). இவர்களுக்கு, திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது.
கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சுமதி தனது தந்தை ராமலிங்கம் வீட்டில் வசித்து வந்தார்.
இதனிடையே, வெளிநாட்டில் பணிபுரிந்த செல்வக்குமார் கடந்த மாதம் கோவில்பாளையம் கிராமத்துக்கு வந்தாராம்.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் சுமதியை குடும்பம் நடத்த வருமாறு வற்புறுத்தியதால் மனமுடைந்த சுமதி இன்று விஷம் குடித்தார். அரியலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார்.
இதுகுறித்து ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில், குன்னம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயபால் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.