பெரம்பலூர், ஜூன் 19: பெரம்பலூர் மாவட்டத்தில் வியாழன், வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை அலுவலர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
பெரம்பலூர் -எளம்பலூர் சாலையில் உள்ள திருமலை நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (70). சுகாதாரத் துறை அலுவலராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர், வியாழக்கிழமை இரவு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தீரன்நகர் அருகே சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் கிருஷ்ணசாமி மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று கிருஷ்ணசாமியின் உடலை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த பெரம்பலூர் போலீஸார், கன்னியாகுமரி மாவட்டம், கல்குளத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் பெர்னாட்சை (25) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி மோதி கோயில் குருக்கள் சாவு:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் நாராயணன் (29). இவர், வெங்கலம் கோயில் குருக்களாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை தொண்டமாந்துறை கிராமத்திலிருந்து வெங்கலம் கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்தபோது, கிருஷ்ணாபுரத்திலிருந்து தொண்டமாந்துறையை நோக்கி சென்ற டிப்பர் லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில், அரும்பாவூர் போலீஸார் வழக்குப் பதிந்து தொண்டைமாந்துறையை சேர்ந்த துரைராஜ் (32) என்பவரை கைது விசாரனை நடத்தி வருகின்றனர்.