பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பேர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அழகுமுத்து மகன் அழகேசன் (42). இவர், திங்கள்கிழமை இரவு மருதடி கிராமத்திலிருந்து நாரணமங்கலம் கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், நாரணமங்கம் அருகே சென்றபோது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற ஆம்னி பேருந்து மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அழகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது உறவினர் தனசேகர் (40) அளித்த புகாரின்பேரில், பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து ஆம்னி பேருந்து ஓட்டுநர் திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த சவுந்திரராஜனை (45) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
டிப்பர் லாரி கவிழ்ந்து ஓட்டுநர் சாவு:
சேலம் மாவட்டம், நாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிமுத்து மகன் சின்னதுரை (39). இவர், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிரஷரில் டிப்பர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு மலையிலிருந்து லாரி ஓட்டிவந்த போது எதிர்பாராதவிதமாக டிப்பர் லாரி கவிழ்ந்தது. இதில், லாரியின் டயரில் சிக்கிய சின்னதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது தம்பி சதீஸ்குமார் (33) அளித்த புகாரின்பேரில், அரும்பாவூர் காவல் நிலைய ஆய்வாளர் தங்கவேல் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.