பெரம்பலூர் ; பெரம்பலூர் அருகே நடந்த மூன்று விபத்துகளில் மூவர் பலியாகினர்.
சிவகங்கை மாவட்டம் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதவன்,(60), இவர் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கல்லூரி முன் உள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது சென்னையிலிருந்து தூத்துக்குடியை நோக்கி சென்ற சான்ட்ரோ கார், இவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து மாதவனுடன் வேலை செய்பவரான ராமன்,(32), என்பவர் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிந்து சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கார் டிரைவர் கணபதி,(28) என்பவரை கைது செய்து விசாரிக்கிறார்.
பெரம்பலூர் அருகே உள்ள கண்ணப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கோம்பை மகன் முருகன் (45), தண்ணீர்பந்தல் பகுதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற கார் மோதியதில் முருகன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பெரியசாமி,(37), என்பவர் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிந்து சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சுகுமாரன் மகன் கார் டிரைவர் மணி,43, என்பவரை கைது செய்து விசாரிக்கிறார்.
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி எதிரில் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் ஆண் ஒருவர் அவ்வழியே சென்ற டயோட்டா கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து சிறுவாச்சூர் வி.ஏ.ஓ., ஞானப்பிரகாசம் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிந்து திருநெல்வேலி மாவட்டம் தரணை கிராமத்தை சேர்ந்த எட்வர்ட் மகன் கார் டிரைவர் பாக்கியராஜ்,(28), என்பவரை கைது செய்து விசாரிக்கிறார்.