பெரம்பலூர் : வேகக்கட்டுப்பாட்டுக் கருவி இயங்காத 23 பள்ளி, கல்லூரி பேருந்துகளின் தகுதிச்சான்று இன்று ரத்து செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிக்கு சொந்தமான வாகனங்களால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும், இந்த பேருந்துகளில் பொருத்தப்பட்ட வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் செயல்படுவதில்லை என்றும் பெற்றோரும், பொதுமக்களும் புகார் அளித்தனர்.
இதனையொட்டி , மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சொந்தமான வாகனங்களை சோதனையிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, சார் ஆட்சியர் மதுசூதன ரெட்டி தலைமையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அறிவழகன், போக்குவரத்து ஆய்வாளர் பாபு ஆகியோர் தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகளை ஆய்வு மேற்கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மைதானத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட சோதனையில் 75 பேருந்துகளில் சோதனையிடப்பட்டது.
இதில் அவரச வழி, முதலுதவி பெட்டி உள்ளதா என சோதனையிடப்பட்டது. இந்த ஆய்வில் வேகக்கட்டுப்பாட்டு கருவி இயங்காத 23 வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது.