பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தம் அருகே தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் மூலம் ரூ.3 இலட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மதி அங்காடியை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் தரேஸ்அஹமது இன்று திறந்து வைத்தார்.
மகளிர் திட்டத்தின் மூலம் பெண்கள் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை பொதுமக்களிடம் விற்பனை செய்ய உதவும் வகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் மூலம் ‘மதி’ என்று பெயரிடப்பட்ட அங்காடிகள் அமைக்கப்பட்டு வருகின்றது. அந்த முயற்சியின் தொடக்கமாக பெரம்பலூர; புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மதி அங்காடி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
இன்று வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள மதி அங்காடியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ்அஹமது திறந்து வைத்து, விற்பனையை துவைக்கி வைத்தார்.
இந்த மதி அங்காடியில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களான தழுதாழை ஊராட்சியை சேர்ந்த மரச்சிற்பங்கள், வேலூர் ஊராட்சியை சேர்ந்த கால் மிதியடிகள், சிறுவாச்சூர் ஊராட்சியை சேர்ந்த நவதானிய உணவு வகைகள், பிற மாவட்டத்தைச் சேர்ந்த மண் பொம்மைகள், செராமிக் பொம்மைகள், தேன் உணவுகள், சணல் பைகள், சேலைகள், துணி வகைகள், காகித கூழ் பொம்மைகள் உள்ளிட்ட பல மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களையும் மேம்படுத்தும் வகையில் இந்த அங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. சுய உதவிக்குழுக்கள் சுயமாக தயாரிக்கும் பொருட்களை வாங்கி பெண்களின் வாழ்க்கைக்கு உதவிட பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர், புதுவாழ்வுத் திட்ட மாவட்ட மேலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வேப்பந்தட்டை ஒன்றியக்குழு துணைத் தலைவர், வேலுசாமி, வேப்பந்தட்டை ஊராட்சி மன்றத் தலைவர், விற்பனைச் சங்க மேலாளர் உள்ளிட்ட அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சுயஉதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.