வேப்பந்தட்டை அருகே அரசு பஸ்சுக்கு வழிவிட ஒதுங்கிய போது தனியார் பஸ் சாலையில் சாய்ந்ததால் பயணிகள் காயமடைந்தனர்.
பெரம்பலூரில் இருந்து வேப்பந்தட்டை வழியாக கை.களத்தூருக்கு ஒரு தனியார் பஸ் நேற்று காலை 11 மணி அளவில்
சென்றுகொண்டிருந்தது.பஸ்ஸை டிரைவர் சிலம்பரசன்(30) ஓட்டினார்.பஸ் கிருஷ்ணாபுரம்-கை.களத்தூர் சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது எதிரே பெரம்பலூரை நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பஸ்சுக்கு வழிவிடுவதற்காக ஒதுங்கியது. அப்போது சாலையில் ஓரத்தில் போடப்பட்டிருந்த களர்மண்ணில் பஸ் சக்கரங்கள் புதைந்து ஒரு பக்கமாக சாய்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் லேசான காயமடைந்தனர். புதிதாக போடப்பட்ட இந்த சாலையின் ஓரத்தில் கிராவல் மண்ணை கொட்டுவதற்கு பதிலாக சாதாரண களர்மண்ணை கொட்டி நிரப்பியதால் மண் புதைகுழிபோல் உள்வாங்குவதால்தான் இந்த சாலையில் இது போன்ற பல விபத்துக்கள் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விபத்து குறித்து கை.களத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.