பெரம்பலூர் : வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூரில் சாலையை கடக்க முயன்ற புள்ளி மான் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மான் செத்தது.

மோட்டார் சைக்கிளிலில்பயணம் செய்ய 5-ம் வகுப்பு மாணவன் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் வெண்பாவூர், அய்யனார்பாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் கிராமங்களில் உள்ள வனப்பகுதிகளில் மான்கள் மற்றும் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகிறது.

வனப்பகுதியில் தற்போது போதிய தண்ணீர் வசதியில்லாமல் நீர் நிலைகள் வறண்டு விட்டன. மான்கள் தாகம் தணிக்க தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வரும் போது வாகனங்களில் அடிப்பட்டு உயிரிழப்பதும், தெருநாய்கள் கடித்து உயிரிழப்பதும் அவ்வப்போது நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை வி.களத்தூரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சக்தி(வயது 22) என்பவருடன் அதே ஊரை சேர்ந்த கனகராஜ் மகன் பார்த்தீபன்(வயது10) மோட்டார் சைக்கிளிலில் மேட்டுச்சேரி பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வி.களத்தூர் ஏரியிலிருந்து மான்கள் கூட்டமாக சாலையின் குறுக்கே ஓடி கடந்தன.

எதிர்பாராத விதமாக சக்தி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் மீது 2 வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் மீது திடீரென மோதியது.

இதில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், உட்கார்ந்து வந்த 5-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பார்த்தீபன் படுகாயம் அடைந்த நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். சக்தி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

மேலும் மோட்டார் சைக்கிள் மோதிய வேகத்தில் புள்ளி மான் படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

தகவலறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து உயிரிழந்த மானை மீட்டு கால்நடை மருத்துவர் உதவியுடன் உடற்கூறு ஆய்வு செய்து புதைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா;.


Copyright 2015 - © 2021 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!