பெரம்பலூர் : வேப்பந்தட்டை ஒன்றியம் அனுக்கூர் ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியில் சேர்ந்து வேலை செய்யாமல் இருந்த 250 பயனாளிகளின் அட்டைகளை வட்டார வளர்ச்சி அதிகாரி இளங்கோவன் பறிமுதல் செய்தார்.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஏரி ஆழப்படுத்தும் பணி, வரத்து வாய்கால் சீரமைக்கும் பணி மற்றும் சாலை செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஊராட்சி பகுதியில் இத்திட்டத்தில் சேர்ந்துள்ள பயனாளிகள் பெரும்பலானோர் வேலை செய்யாமல் படுத்து தூங்குவதாக வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அதிகாரி இளங்கோவனுக்கு தகவல் வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அதிகாரி இளங்கோவன் தீவிரமாக ஆய்வு செய்தார். அப்போது அனுக்கூர் ஊராட்சியில் ஏரி ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பயனாளிகள் பெரும்பாலானோர் வேலை செய்யாமல் மரத்தடி நிழலில் தூங்கி கொண்டிருந்தனர்.
இதனைக்கண்ட வட்டார வளர்ச்சி அதிகாரி இளங்கோவன் பணியில் சேர்ந்து வேலை செய்யாமல் இருந்த பயனாளிகளின் வருகை பதிவேடு அட்டைகளை பறிமுதல் செய்தார்.
சம்பளம் குறைக்கப்படும்
மேலும் இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அதிகாரி இளங்கோவன் கூறியதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சேரும் பயனாளிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவு பணியினை முடித்தால் மட்டுமே திட்டத்தில் முழு ஊதியம் வழங்கப்படும். பணி நேரத்தில் வேலை செய்யாமல் இருந்தால் அவர்களது அட்டை பறிமுதல் செய்யப்படும். மேலும் வேலை செய்து முடித்த அளவிற்கு மட்டுமே அளந்து சம்பளம் வழங்கப்படும்.
ஏற்கனவே பில்லாங்குளம் ஊராட்சியில் பணியில் சேர்ந்து வேலை செய்யாமல் இருந்த 60 பயனாளிகளின் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்