மாணவரணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் எம்.என். ராஜா பேசிய போது எடுத்தப்படம்
பெரம்பலூர் : 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உண்டாக்கும் உலக வர்த்தக மாநாட்டை நடத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாணவரணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம், மாணவரணி மாவட்டத் தலைவர் அப்துல்பாரி தலைமையில் இன்று நடைபெற்றது.
அக்கட்சியின் மாவட்டத் தலைவர் எம்.என். ராஜா முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ரத்தினசாமி, வட்டாரத் தலைவர்கள் சிவக்குமார், பாலு, மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில் ஆகியோர் மாணவரணியின் செயல்பாடுகள் குறித்து பேசினர். தொடர்ந்து, புதிய நிர்வாகிகளின் செயல்பாடு, கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில், 5 லட்சம் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கக் கூடிய உலக வர்த்தக மாநாட்டை சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது.
நாரணமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலையில் அனல் மின் நிலைய திட்டத்தை தொடங்கக் கூடாது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உரிய நேரத்துக்கு சென்று வர வசதியாக காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும்.
விசுவக்குடி நீர்தேக்க திட்டத்தை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். மாணவரணி சார்பில் பூரண மது விலக்கை அமுல்படுத்தக் கோரி 15 ஆயிரம் நபர்களிடம் கையெழுத்து பெறுவது. அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் அமைப்பு ஏற்படுத்த வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு விடுதிகளில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த ஆய்வு மேற்கொண்டு மாணவர் அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாணவரணி நிர்வாகிகள் பாலு, விக்கி, சிவா, பாலாஜி, கண்ணன், அப்துல்வாகித் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட துணைத் தலைவர் முருகேசன் வரவேற்றார். மாவட்ட கலை பிரிவு தலைவர் அருண் நன்றி கூறினார்.