பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையில் காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்
பெரம்பலூர் மாவட்டத்தில் செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு மூலம் ஒரு காவலர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடத்திற்கு பொதுப்போட்டி முன்னுரிமை பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மகளிர், ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை காவலர் பணியிடத்தில் நியமனம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தவறியவராக இருத்தல் வேண்டும். நன்கு எழுதப் படிக்க தெரிந்தவராகவும், மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராகவும், நல்ல உடல் தகுதி உடையவராகவும், பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்தவராகவும் இருத்தல் வேண்டும். 01.7.2015 அன்று குறைந்த பட்சம் 18 வயதைக் கடந்தவராய் இருத்தல் வேண்டும்.
உயர்ந்த பட்ச வயது வரம்பு பொதுப்பிரிவிற்கு 30க்குள்ளும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப் பட்டோருக்கு 32க்குள்ளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தவருக்கு 35க்குள்ளும் வயது வரம்பு இருக்க வேண்டும்.
விண்ணப்ப தாரர்கள் தங்கள் முழுக் கல்வித் தகுதி மற்றும் இதர சான்றுகளின் சான்றொப்பமிட்ட நகல்களுடன் 28.10.2015க்குள் மாவட்ட ஆட்சியரகத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலக வளாகத்தில் உள்ள செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தில் தங்களது விண்ணப்பங்களை அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பித்த தகுதியுள்ள நபர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி, இடம் ஆகிய விபரங்கள் தனியே அழைப்புக்கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.
தகுதியுடைய நபர்கள் விண்ணப்பித்துப் பயன் பெறவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.