பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
மத்திய அரசு, வேளாண்மைதுறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உரங்களுக்கு அதிக அளவில் மானியம் வழங்கி வருகின்றது. எனவே உரங்களுக்கு வழங்கப்படும் மானியம் சரியான முறையில் பயன்படவும், போலி உரங்களை முற்றிலுமாகத் தடுக்கவும், உரங்கள் சரியான முறையில் விவசாயிகளைச் சென்றடையவும், மத்திய அரசு உர கட்டுப்பாட்டு சட்ட திருத்தம் 2015-ஐக் கொண்டு வந்துள்ளது.
இதன்படி இனி உரக்கடை லைசென்ஸ் பெற வேண்டுமென்றால் பி.எஸ்.சி.,(அக்ரி) அல்லது பி.எஸ்.சி,,(கெமிஸ்ட்ரி) அல்லது வேளாண் பட்டயப்படிப்பு.,(டிப்ளமோ அக்ரி) இவற்றைப் படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மற்றவர்களுக்கு உரக்கடை லைசென்ஸ் வழங்கப்படமாட்டாது. ஏற்கனவே உரக்கடை வைத்திருப்பவர்களுக்கு புதுப்பித்தலுக்கு இது பொருந்தாது. அவர்கள் வழக்கம்போல் தங்களது லைசென்சை புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும் பூச்சி மருந்து விற்பனைக்கான லைசென்சுக்கு இது பொருந்தாது. மேற்கண்ட கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு மட்டுமே இனி வரும் காலங்களில் புதிதாக உரக்கடை லைசென்ஸ் வழங்கப்படும், என அவரது செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.