பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வ.களத்தூர் அருகே உள்ள தைக்கால் கிராமத்தை சேர்ந்தவர் யூனுஸ்கான் (வயது55) விவசாயி. இவர் நேற்று இரவு குடும்பத்தினருடன் வீட்டின் முன்பகுதியில் தூங்கியுள்ளார்.
அப்போது நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டின் பின்புற கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை திறந்து, அதில் வைத்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை திருடி சென்றனர்
மேலும் வீட்டில் வைத்திருந்த பெட்டியை தூக்கி சென்று வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தில் வைத்து உடைத்து பணம் ஏதும் இருக்கிறதா என பார்த்துள்ளனர். பணம் ஏதும் இல்லாததால் அதிலிருந்த துணிகளை அங்கேயே போட்டுவிட்டு சென்று விட்டனர்.
பின்னர், நேற்று காலை தூங்கி எழுந்து பார்த்த யூனுஸ்கான் பின்புறக்கதவு திறந்து கிடப்பதையும், பீரோவில் வைத்திருந்த 6 பவுன் தங்க சங்கிலி காணாமல் போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து வ.களத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் விவேக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்களும், மோப்பநாய் சோதனையும் நடத்தப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.