பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் சின்னாறில் (சர்க்கரை ஆலை) திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் மேற்கு பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது சின்னாறு நீர்தேக்கம். 72 மில்லியன் கனஅடி கொள்ளளவு தண்ணீரை தேக்கி வைக்ககூடிய இந்த ஏரி சுமார் 3 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும்.
தண்ணீர் வெளியேறும் மதகு பகுதி 13 அடி உயரம் கொண்டது. பெருந்தலைவர் கமராஜர் ஆட்சி காலத்தில் அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் கக்கனால் இந்த நீர்த்தேக்கம் துவக்கி வைக்கப்பட்டது.
இந்த நீர்தேக்கத்தால் எறையூர், பெருமத்தூர், பெண்ணகோணம் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கோனேரி ஆறு, வேதநதி ஆறு ஆகியவற்றில் வரக்கூடிய தண்ணீரானது இந்த நீர் தேக்கத்தில் தேக்கிவைக்கப்பட்டு பாசனத்திற்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த பகுதியில் பெய்து வரும் கனமழையால் சின்னாறு நீர்தேக்கம் தனது முழு கொள்ளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதனால் இந்த பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.