பெரம்பலூர்: 10 ஆம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை இணையம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நடைபெற உள்ள ஜூன், ஜூலை 2015-ல் 10 ஆம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாள்களில் விண்ணப்பித்த அனைத்து தனித் தேர்வர்களும் (தட்கல் உள்பட) வியாழக்கிழமை முதல் ஜூன் 18) www.tndge.in என்ற இணையத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேற்கண்ட இணையத்துக்கு சென்று SSLC EXAM JUNE/JULY 2015 -PRIVATE CANDIDATE- HALL TICKET PRINT OUT என்ற வாசகத்தை கிளிக் செய்து, அந்த பக்கத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்தால், தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வில் 15 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் செய்முறைத் தேர்வை மீண்டும் செய்வதோடு, எழுத்துத் தேர்வுக்கும் வருகை புரியவேண்டும்.
மார்ச் 2015 10 ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்கள் நடைபெற உள்ள சிறப்பு துணை தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு எழுதுவதோடு அறிவியல் பாட கருத்தியல் தேர்வையும் எழுத வேண்டும். உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.