ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 12 ஆண்டுகளுக்கு பிறகு 88 அடியை எட்டுகிறது.கேரளாவிலும் நீலகிரி மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பி, உபரிநீர் பவானிசாகர் அணைக்கு வருவது அதிகரித்துள்ளது. இதனால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பவானிசாகர் அணை நீர்மட்டம் 10 அடி வரை உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, பவானி சாகர் அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 691 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.தற்போது, அணையின் நீர்மட்டம் 87 புள்ளி ஏழு ஒன்பது அடியாக இருக்கும் நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு பவானிசாகர் அணை நீர்மட்டம் 88 அடியை எட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணையில் 20 டி.எம்.சி. நீர் உள்ள நிலையில், பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 1,000 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது.