பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக சுமார் ஆயிரத்து 200 ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை. மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜேக்டோ) சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று வேலை நிறுத்தம் நடைபெற்றது.
இதையொட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக தமிழ் நாடு ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் கோ.ராமமூர்த்தி, தமிழக ஆசிரியர் கூட்டணி ஆர். செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஜாக்டோ பொறுப்பாளர்கள் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் மாவட்டம் முழுவதும் இருந்து கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரத்து 697 ஆசிரியர்கள் உள்ளனர்.
இதில் ஆயிரத்து 200 மேற்பட்ட ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தொடக்க பள்ளி மாணவர்கள் பலர் பள்ளிக்கு வரவில்லை. பல பள்ளிகள் மூடப்பட்டு இருந்தும் திண்ணையில் அமர்ந்து ஆசிரியர் வருகைக்காக காத்திருந்தனர்.