சென்னையில் புதியதாக 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.
சென்னையில் நேரு பூங்காவில் இருந்து திருமங்கலம் கோயம்பேடு ஆலந்தூர் வழியாகப் பரங்கிமலை வரையிலும், சின்னமலையில் இருந்து கிண்டி, ஆலந்தூர் வழியாக விமான நிலையம் வரையிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை சென்ட்ரல்–நேரு பூங்கா மற்றும் சின்னமலை– டிஎம்எஸ் இடையே புதிய மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் பூரி , மத்தியமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்த முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்டோர், அதில் பயணம் செய்தனர்.2 கி.மீட்டருக்கு 10 ரூபாய், 2 முதல் 4 கி.மீ தொலைவுக்கு 20 ரூபாய், 4 முதல் 6 கி.மீ தொலைவுக்கு 30ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 6 முதல் 10 கிலோமீட்டர் தொலைவுக்கு 40ரூபாய் , 10 முதல் 15 கிலோமீட்டர் வரை 50 ரூபாய், 15 முதல் 20 கிலோமீட்டர் தொலைவு வரை 60ரூபாய், 20-லிருந்து 50 கிலோமீட்டர் தொலைவுக்கு 70 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.