அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக்கல்வி அலுவலர் பி.கணேசன் விடுத்துள்ள தகவல்:
அனைவருக்கும் கல்வி இயக்கம் வாயிலாக 2016-17 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளிச் செல்லாக்குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணியினை மேற்கொள்வது குறித்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலரும், அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளருமான பி.கணேசன் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் பேசியதாவது:
இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி 6 முதல் 14 வயதுடைய அனைத்துக் குழந்தைகளையும் முறையாக பள்ளியில் சேர்த்து கல்வி கற்கும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிச் செல்லாக் குழந்தைகள் மற்றும் 0 முதல் 18 வயதுடைய மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணியினை முதற்கட்டமாக ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 30 வரையிலும், மற்றும் இரண்டாம் கட்டமாகமே 17 முதல் மே 24 வரையிலும் வீடு, வீடாகச்சென்று துல்லியமான கணக்கெடுப்புபணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் வீடு, வீடாகச் சென்று பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட வேண்டும்.
கணக்கெடுப்பு பணியில் பள்ளி செல்லாக் குழந்தைகள், இடைநின்ற குழந்தைகள், புலம் பெயர்ந்த குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கையை மிகச்சரியாக எந்த ஒரு குழந்தையும் விடுபடாமல் கண்டறியப்பட வேண்டும்.
இப்பணியில் ஈடுபடும் களப்பணியாளர்கள் கண்டறியப்படும் குழந்தைகளின் விவரங்களை அதற்குரிய படிவத்தில் அனைத்து தகவல்களையும் புகைப்படத்துடன் கணக்கெடுப்பு பணியின்போது களத்திலேயே சேகரிக்க வேண்டும்.
குறிப்பாக இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் இடம் பெயரும் காலம் கண்டறிதல் வேண்டும். பல்வேறு மாநிலத் தொழிலாளர்கள் தொழில் நிமித்தமாக மாவட்டத்திற்கு வருகின்றனர். அவர்களின் குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஒன்றிய அளவில் ஒரு குழு அமைத்து குடியிருப்புகளை பகிர்ந்தளித்து கணக்கெடுப்பு பணியினை துல்லியமாக மேற்கொள்ளவேண்டும். பள்ளி மாணவர்களிடம் கருத்துக் கேட்பு நடத்தி அவர்களின் குடியிருப்பு, தெரிந்த குழந்தைகள், பள்ளிசெல்லா, இடைநின்ற மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த விபரங்களை சேகரிக்கவேண்டும்.
பள்ளி அளவில் கிராமக் கல்விக்குழு மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு ஆகியோர்களிடம் கலந்து ஆலோசித்து பள்ளிசெல்லா மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் விபரங்களை சேகரிக்கவேண்டும். இந்த பணியினை துவக்குவதற்கு முன்பாக ஊரகவளர்ச்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய துறைகளிடமிருந்து குடியிருப்பு விபரங்களை பெறவேண்டும் என கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க உதவித் திட்ட அலுவலர் பெ.பாஸ்கர், தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் அ.கொளஞ்சி உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.