Employees’ Provident Fund Interest Reduction Injustice: Ensure Minimum Interest! PMK Ramadas !!

பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றும் அமைப்பு சார்ந்த ஊழியர்கள் முதலீடு வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.65 விழுக்காட்டிலிருந்து 8.50% ஆக குறைக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி வாரியத்தின் இந்த முடிவால் 7 கோடி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

தொழிலாளர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் ஆண்டுக்கு 0.15% குறைக்கப்படுவது தொழிலாளர்களின் வாழ்விலும், பொருளாதார நிலையிலும் மிக மோசமான தாக்கங்களை ஏற்படுத்தும். உதாரணமாக 20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒரு தொழிலாளரின் வைப்புநிதி கணக்கில் ரூ.10 லட்சம் சேர்ந்திருப்பதாக வைத்துக் கொள்வோம். வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 0.15% குறைக்கப்பட்டால் அவருக்கு ஆண்டுக்கு ரூ.1500 இழப்பு ஏற்படும். அவர் இன்னும் 15 ஆண்டுகள் பணியாற்றுவதாகக் கொண்டால், அந்த 15 ஆண்டுகளுக்கும் இந்த தொகை மீதான வட்டி இழப்பு ஏற்படும். இதனால், அவர் ஓய்வு பெறும் போது ஏற்படும் இழப்பு என்பது மிகவும் அதிகமாக இருக்கும். அது தொழிலாளர்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு இருக்கும்.

பொருளாதார பின்னடைவு காரணமாக வட்டி விகிதம் குறைந்து வருவதாகவும், அதனால் வருங்கால வைப்பு நிதி வாரியத்தின் வருமானம் குறைந்து வருவதால், அதை ஈடுகட்டும் வகையில் தான் வங்கிகள் வட்டியை குறைத்ததைப் போலவே வருங்கால வைப்பு நிதி மீதான வட்டியும் குறைக்கப்படுவதாக வாரியம் கூறியிருப்பதை ஏற்க முடியாது. வங்கிகளில் செய்யப்படும் வைப்பீடுகளையும், தொழிலாளர்களின் வருங்கால வைப்புத் தொகையையும் சமமாக பார்க்க முடியாது. வங்கிகளில் செய்யப்படும் வைப்பீடு இலாபப் பங்கின் சேமிப்பு ஆகும். ஆனால், வருங்கால வைப்பு நிதி என்பது தொழிலாளர்கள் தங்களின் வருங்கால சமூகப் பாதுகாப்புக்காக தங்களின் நிகழ்கால தேவைகளை குறைத்துக் கொண்டும், வசதிகளை தியாகம் செய்தும் தான் வருங்கால வைப்புத் தொகையில் செலுத்துகின்றனர். அதன் மீதான வட்டியை வங்கிகளில் செய்யப்படும் வைப்பீடுகளின் வட்டிக்கு இணையாக விகிதத்தில் குறைப்பது நியாயமல்ல.

1989-90 முதல் 2000-01 வரையிலான 12 ஆண்டுகளுக்கு வருங்கால வைப்பு நிதி மீது 12 விழுக்காடு வட்டி வழங்கப்பட்டது. அதன்பின் 20 ஆண்டுகளில் 3.50% வட்டி குறைக்கப்பட்டுள்ளது. இது வருங்கால வைப்பு நிதியை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் மிகப்பெரிய பொருளாதார தாக்குதல் ஆகும். தொழிலாளர்களிடமிருந்து சுமார் 18 லட்சம் கோடி வைப்புத்தொகையாக வசூலித்து, அவற்றில் 85% தொகையை கடன் சந்தையில் முதலீடு செய்துள்ள வைப்பு நிதி வாரியம், அவற்றின் மூலம் 14.74% லாபம் ஈட்டியுள்ளது. அதில் 57.66 விழுக்காட்டை மட்டுமே தொழிலாளர்களுக்கு வட்டியாக வழங்குகிறது. மீதமுள்ள 42.34% லாபம் எதற்காக செலவிடப்படுகிறது என்பது தெரியவில்லை. வருங்கால வைப்பு நிதி வாரியம் என்பது தொழிலாளர்களுக்கு சேவை செய்வதற்கான வாரியம் ஆகும். அந்த வாரியம் அதன் லாபத்தில் குறைந்தது 80 விழுக்காட்டையாவது தொழிலாளர்களுக்கு வட்டியாக வழங்க வேண்டும். அவ்வாறு வழங்குவதாக இருந்தால் ஆண்டுக்கு 11.80% வட்டி வழங்குவது மிக எளிதில் சாத்தியமாகும்.

தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி என்பது தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, அரசுக்கும் மிகவும் முக்கியமாகும். அரசின் பெரும்பான்மையான திட்டங்களுக்கு எல்.ஐ.சி நிறுவனத்திற்கு அடுத்தபடியாக தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி வாரியம் தான் அதிக நிதியை கடனாக வழங்குகிறது. அதில் தொழிலாளர்களும், அவர்களின் முதலாளிகளும் கண்டிப்பாக முதலீடு செய்ய வேண்டும் என்பதை, அவர்களின் பலவீனமாகவும், தங்களின் பலமாகவும் பயன்படுத்திக் கொண்டு மிகக்குறைந்த வட்டியை வழங்குவது பெரும் துரோகமாகும். இப்போக்கை வருங்கால வைப்பு நிதி வாரியம் கைவிட வேண்டும்.

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி முதலீட்டையும், அதன் மீது வழங்கப்படும் வட்டியையும் அடிப்படை வாழ்வாதாரமாக பார்க்க வேண்டும். அவர்கள் ஓய்வு பெறும் போது குறைந்தபட்ச வசதிகளுடன் வாழ்க்கை நடத்துவதை உறுதி செய்யும் வகையில் வருங்கால வைப்பு நிதிக்கு குறைந்தது 10% வட்டி நிர்ணயிக்கப்பட வேண்டும். கடன் சந்தை நிலவரம் சிறப்பாக இருந்து அதிக லாபம் கிடைக்கும் போது அதற்கு இணையான வட்டியையும், இல்லாவிட்டால் குறைந்தபட்ச வட்டியையும் வாரியம் வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!