Entrance exam for students who wish to join the Super 30 class: Perambalur Collector visited.

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களை தமிழகத்தின் சிறந்த மருத்துவ கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக சிறந்த பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் இடம்பெற செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்,

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவம்-30, சிறப்பு பொறியியல்-30, என்ற பெயரில் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு “சூப்பர்-30” என்ற பெயரில் வகுப்புகள் 2013ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றன.

இவ்வகுப்பில் சேர்ந்து பயில்வதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் 400 ற்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்வாகும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் இன்று பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சூப்பர் 30 வகுப்பிற்கான நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்த நுழைவுத்தேர்வில் மொத்தம் 87 மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். இந்நுழைவுத் தேர்வை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா நேரில் பார்வையிட்டார்.

இந்த சிறப்பு வகுப்புகளில் அரசு பள்ளிகளில் சிறப்பாக பணிபுரிந்து வரும் நன்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களும் அரசு பள்ளி விடுதிகளில் தங்கிப் பயில சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பாடத்துடன் தன்னம்பிக்கையூட்டும் மனவளப்பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவர்கள் மூலம் சிறப்பு வகுப்பு மாணவர்களுக்காக NIT, IIT, NEET பொது நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த மேல்நிலைப்பொதுத்தேர்வில் சரண்யா என்ற சூப்பர் 30 வகுப்பில் பயின்ற மாணவி 1121 மதிப்பெண்களுடன் பொறியியல் படிப்பிற்கான கட்-ஆப் மார்க் பிரிவில் 197.25 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் 1,100 மதிப்பெண்களுக்கு மேல் ஒருவரும் 1050 – 1100 பிரிவில் 8 நபர்களும், 1000 – 1049 பிரிவில் 23 நபர்களும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சூப்பர் 30 வகுப்பில் பயின்ற 46 மாணவ – மாணவிகளில் நீட் தேர்வில் அருள்பாண்டியன் என்ற மாணவன் 228 மதிப்பெண் எடுத்துள்ளார். மேலும், 100க்கு மேல் மதிப்பெண்களை 19 நபர்கள் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் அருள்மொழிதேவி, பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன், சூப்பர் 30 சிறப்பு வகுப்பின் ஒருங்கிணைப்பாளர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!