Entrepreneurs request government to exempt 6 months of GST payment
பெரம்பலூர், ஜூலை.1- பெரம்பலூர் மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கத்தின் தலைவர் ஓம்சக்தி உதயகுமார் மாவட்ட தொழில் மையத்தின் பொதுமேலாளரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் மத்திய மற்றும் மாநில அரசுகளால் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்திரவு நடைமுறையில் உள்ளது. சிலமாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தாலும்,தொழில்களை நடத்துவதில் நடைமுறை சிக்கல்கள் இருந்துவருகின்றன. ஊரடங்கிற்கு முன்பு இருந்ததை போல தொழில்வாய்ப்புகள் அல்லது ஆர்டர்கள் கிடைக்காமல் தொழில் முனைவோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் அனைத்து வகையான குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் முடங்கிப்போய் உள்ளன. தொழில்கள் செயல்படாத காரணத்தால், சிறு தொழில் நிறுவனங்களும் மின்சார கட்டணத்தை செலுத்துவதில் இருந்தும், ஜி.எஸ்.டி. வரிவசூல் செய்வதில் இருந்தும் 6 மாதத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும்.
ஊரடங்கு காலத்தில் முடங்கியுள்ள நிலையில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி பெறுவதற்கு கட்டாயம் அரசின் உதவி அவசியம் தேவைப்படுகிறது. ஆகவே அனைத்து தொழில்புரிவோருக்கு வங்கிகளில் சொத்து பிணையம் இல்லாம் குறைந்த வட்டியில் கடன்உதவி வழங்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.