Five people who stole goats near Perambalur were caught by the public and handed over to the police

Model Photo

பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எளம்பலூர் தண்ணீர் பகுதியில் வசிப்பவர் மாரியப்பன் (வயது 55), இவர் 30க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் வீடு திரும்பவில்லை இதனால் சந்தேகமடைந்த மாரியப்பன் உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்கள் ஆடுகளை தேடிச் சென்றனர். அப்போது, 5 பேர் கொண்ட கும்பல் ஷேர் ஆட்டோ ஒன்றில் மாரியப்பனுக்கு சொந்தமான ஆடுகளை கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை சுற்றி வளைத்த மாரியப்பன் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள், ஆட்டோவுடன் கடத்தல் கும்பலை தண்ணீர்பந்தல் பகுதிக்கு கொண்டு வந்து தர்மஅடி கொடுத்து, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வெள்ளாடுகளை உரிமையாளரிடம் ஒப்படைத்த தோடு பிடிபட்ட 5 நபர்களையும் மங்கலமேடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட 5 பேரும் திருமாந்துறை கிராமத்தை சேர்ந்த பெரியசாமி(42), பெருமாள்(38), சிவா(31), மற்றும் வி. ஆர்.எஸ்.எஸ்.புரம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி(62), குணசேகரன்(57), ஆகியோர் என்பது தெரிய வந்தது.

இதில் பெரியசாமி டேங்க் ஆபரேட்டராகவும், குணசேகரன் பணி மேற்பார்வையாளராகவும், ராமசாமி வாட்ச்மேனாகவும் எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வந்ததும் கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் உள்ள ஏராளமான விவசாயிகளின் வெள்ளாடுகளை கடத்திச் சென்று கடலூர் மாவட்டத்தில் விற்று அந்த பணத்தை பங்குபோட்டு செலவு செய்து வந்ததும், கையும் களவுமாக பொதுமக்களிடம் பிடிபட்டதும் தெரிய வந்துள்ளது. மேலும், இது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!