Perambalur: Best Slogan Competition for Book Fair; Collector’s Prize Announcement!
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும், மாணாக்கர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தினை உருவாக்கும் விதமாகவும், புத்தக எழுத்தாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆகியோர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், பொதுமக்கள் மற்றும் புத்தக வாசிப்பாளர்கள் ஆர்வமுடன் காணும் வகையில், புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது 9ஆம் ஆண்டு புத்தக திருவிழா, பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் 31.01.2025 அன்று தொடங்கி 09.02.2025 வரை 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இப்புத்தக திருவிழாவில் அனைவரையும் கவர்ந்திடும் வகையிலும் அழைப்பிதழ், விளம்பர பதாகைகள் உள்ளிட்ட அனைத்திலும் இடம் பெறும் வகையிலும், பயன்படுத்தும் வகையிலும் புத்தக திருவிழா தொடர்பான சிறந்த வாசகம் (Slogan) அமைத்திட தேர்வுப் போட்டி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், கல்லூரி மாணவ,மாணவியர்கள் தமிழில் 50 எழுத்துக்களுக்கு மிகாமல் புத்தகத் திருவிழா அடிப்படையாகக் கொண்ட சிறந்த வாசகத்தினை வெள்ளைத் தாளில் தெளிவாக எழுதி போட்டியாளர் பெயர், முகவரி, மற்றும் தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களுடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெரம்பலூர் – 621 212 என்ற அலுவலகத்தில் நேரிலோ, தபால் மூலமாகவோ அல்லது seccpmb@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பிட வேண்டும். சிறந்த வாசகம் (Slogan) வந்து சேர வேண்டிய கடைசி நாள் 20.01.2025 ஆகும்.
போட்டியில் பங்கேற்கும் அனைத்து வாசகங்களும் (Slogan) தேர்வுக்குழுவினர் பார்வையிட்டு சிறந்த வாசகத்திற்கு ரூ.10,000 பரிசாக வழங்கப்படும். இந்த வாசகங்கள் தற்பொழுது நடைபெறும் புத்தகத் திருவிழா நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும். இந்தப் போட்டியில் கலந்துகொள்ள வயது வரம்பு கிடையாது. ஆர்வமுள்ளவர்கள் இந்த வாசக போட்டியில் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு, தெரிவித்துள்ளார்.