Villagers protest to bury the body of an old woman who was killed by Corona

பெரம்பலூர் அருகே கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது .

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி சாந்தி (62). இவருக்கு, சளி, காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து கடந்த 18ம் தேதி பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் மூதாட்டிக்கு கடந்த 20 ம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து அவரது சளி,ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இதில் கரோனா வைரஸ் தொற்று இருப்பது 21 ம்தேதி உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்குள்ள கரோனா சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாந்தி நேற்று அதிகாலை இறந்தார்.

இதையடுத்து புதுநடுவலூர் எல்லைக்குள்பட்ட மலையடிவாரம் பகுதியில் கரோனோவால் இறந்த சாந்தியின் உடலை அடக்கம் செய்வதற்கு பெரம்பலூர் ஆர்டிஓ (பொ) சக்திவேல் அறிவுறுத்தினார். தொடர்ந்து அப்பகுதியில் குழிதோண்டி சாந்தியின் உடலை அடக்கம் செய்ய முயன்றபோது அக் கிராம மக்கள் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.

தகவலறிந்த மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி, பாதுகாப்புத் திட்ட தாசில்தார் சரவணன், ஆர்ஐ இளங்கோவன், சுகாதார மேற்பார்வையாளர் ராஜமோகன், சுகாதார ஆய்வாளர் ராஜகோபால் ஆகியோர் பொது மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து உடல் அடக்கம் செய்வதை கைவிட்டு, திருச்சி ஓயாமேரி மயானத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டதால் பொது மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது .


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!