10 , 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதம் தேர்ச்சி பெறும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தலைமையாசிரியர்களுக்கு ஆட்சியர் அறிவுரை
பெரம்பலூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடன் நடந்து முடிந்த அரையாண்டுத் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறித்த ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் இன்று (3.2.2016) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கூட்டத்தில் பள்ளி வாரியாக அரையாண்டு தேர்ச்சி சதவிகிதம் குறித்து ஆய்வு செய்த பின்னர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் பேசியதாவது:
நமது பெரம்பலூர் மாவட்டம் மார்ச் 2014ல் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.3 சதவீதம் பெற்று மாநிலத்தில் 15 வது இடத்தையும், 12ஆம்வகுப்பில் 96.03மசதவீதத்தை பெற்று 4ஆம் இடத்தையும் பெற்றது.
மார்ச் 2015ல் 10ஆம்வகுப்பு பொதுத் தேர்வில் 97.25 சதவீதம் பெற்று மாநிலத்தில் 5 வது இடத்தையும், 12ஆம்வகுப்பில் 97.25 சதவீதம் பெற்று மாநிலத்தில் 2ஆம் இடத்தையும் பெற்றுள்ளது. மார்ச் 2016ல் நடைபெற உள்ள அரசுப்பொதுத் தேர்வில் தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவியர்களும் வெற்றி பெற்று மேலும் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த தேவையான பயிற்சிகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். வெளியூர் செல்லும் மாணவர்களாக இருந்தால் அவர்களை, அரசு மாணவ- மாணவியர் விடுதிகளில் தங்கவைத்து சிறப்பு பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள என்றும்,
அதனைத்தொடர்ந்து நடந்து முடிந்த அரையாண்டுத் தேர்வில் தேர்ச்சி சதவிகிதம் குறைந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் தங்கள் பள்ளிகளில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்றும், தேர்ச்சி சதவிகிதத்தை உயர்த்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெறுவதற்கான வழிமுறை, ஆலோசனை மற்றும் அறிவுரைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். அனைத்துப் பள்ளிகளிலும் கழிவறைகள் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும், பள்ளி வளாகம் சுகாதாரமானதாக இருக்கத் தேவையான நடவடிக்கைகளையும் தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடாஜலம், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பிரேம்குமார், மணிவண்ணன் மற்றும் தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர்.