10 crore year old Fossil Tree near Perambalur: Increase in visitation by students and tourists!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாத்தனூர் பகுதி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருந்தது. அப்போது வாழந்து வந்த கடல்வாழ் உயிரினங்கள், தாவரங்கள், மரங்கள் ஆகியவை காலப்போக்கில் புதையுண்டு படிமங்களாக மாறின. புவியியல் ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட போது, இப்படிமங்களின் முக்கியத்துவம் குறித்து உலகிற்குத் தெரியவந்தது.

சாத்தனூரில் கல்லுருவாகிய பெரிய அடிமரம் ஏறத்தாழ 10 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். “கோனிபர்ஸ்” வகையைச் சார்ந்த (பூக்கள் தோன்றாத) இந்த அடிமரம் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த புகழ்பெற்ற புவியியலாளர் டாக்டர்.எம்.எஸ்.கிருஷ்ணன் என்பவரால் 1940-ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.

இந்த கல்லுருவான மரத்தை நமது நாட்டின் பல பகுதிகளிலிருந்து மாணவர்கள், அறிவியலாளர்கள், புவியியலாளர்கள் மற்றும் பல வெளிநாட்டவரும் காண்பதற்கு வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக ஒரு பயணியர் தங்குமிடமும், ஓர் அருங்காட்சியகமும் ரூ.50.50 இலட்சம் செலவினத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களும், மாணவ, மாணவியரும் பயன்பெறும் வகையிலும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொல்லுயிர், கல்மரப் படிமங்கள் குறித்து உலகிற்குத் தெரியப்படுத்தும் விதமாகவும், தேசியப் பொக்கிஷமான இப்படிமங்களைப் பற்றித் தெரிந்து கொண்டு பெருமை கொள்வதற்கும், தற்போது செயல் விளக்கமையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயல்விளக்க மையத்தின் மூலம் சாத்தனூருக்கு மரம் வந்தடைந்து கல்லாக மாறிய படங்கள், அண்டத்தின் தோற்றம் மற்றும் பெருவெடிப்பு கோட்பாடு குறித்து எளிய முறை விளக்கம், உயிரின தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய அண்ட நாட்காட்டி, கண்டங்கள் உருவான விதம், மலைகளின் தோற்றம் மற்றும் மனித பரிணாமம் குறித்த விளக்கங்கள் ஆகியனப் பற்றி தனித்தனி அரங்கங்கள் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் அனைவரையும் கவரும் வண்ணம் சிறப்பான முறையில் நிறுவப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தின் புவியியல் தொன்மை குறித்த பெருமையை பறை பறைசாற்றும் வண்ணம் இம்மையம் விளங்கிவருகின்றது.

இந்த சரித்திரப் புகழ்வாய்ந்த சாத்தனூர் கல்மரத்தை சென்னை பிரசிடென்சி கல்லூரியின் தொல்லியல்துறையில் பயிலும் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் மாணவ மாணவிகள் வருகைதந்து பார்வையிட்ட சென்றனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த கல்மரத்தை பார்வையிட ஏராளமானவர்கள் பார்வையிட்டு செல்கின்றார்கள். அவ்வாறு பார்வையிடுபவர்களுக்கு கல்மரத்தின் வரலாறு குறித்து தெளிவாக எடுத்துரைக்கும் வகையில் தொல்லியல் படிப்பு முடித்துள்ள நபர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பார்வையாளர்களுக்கு கல்மரத்தின் வரலாறு எளிதாக விளக்கப்படுகின்றது . இந்த சாத்தனூர் கல்மரத்தையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள தொல்லியல் சார்ந்த பொருட்களை உள்ளடக்கிய கல்வி மையத்தையும் சமீபகாலத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!