121 in Perambalur district panchayats Gramma Sabha meeting on Independence Day – Collector
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் விடுத்துள்ள அறிவிப்பு :
இந்தியத்திருநாட்டின் சுதந்திர தின நாளான 15.8.2016 அன்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களால் நடத்தப்படும்.
இக்கூட்டங்களில் ஏற்கெனவே நடைபெற்ற கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
அனைத்து ஊராட்சித் தலைவர்களும் தாங்கள் செய்த செயல்பாடுகளை கூட்டத்தில் தெரிவித்திட வேண்டும். அரசு அலுவலர்கள் கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல் வேண்டும். அரசு நலத் திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல் வேண்டும்.
இந்த சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் தாங்கள் வாக்காளர்களாக இருக்கும் கிராம ஊராட்சிகளில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கிராம சபைக் கூட்டம் நல்ல முறையில் சீரும் சிறப்புமாக நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
வட்டாரம் வாரியாக மண்டல அலுவலர்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிராம சபைக் கூட்டத்தில் பொது மக்கள், பெருந்திரளாக கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்து தக்க ஒத்துழைப்பு தரவேண்டும். என கேட்டுக் கொண்டுள்ளார்.