தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ) அமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் இன்று மறியலில் ஈடுபட்ட 700 பெண்கள் உட்பட 1,300 பேரை போலீசார் கைது செய்தனர்.
அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் ஊதியம் மற்றும் படிகள் மத்திய அரசுக்கு இணையாக தமிழக அரசு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும், தன்பங்களிப்பு ஊதிய திட்டத்தை நீக்கிவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஆசிரியர் தகுதித்தேர்வை நீக்க வேண்டும், தொடக்க பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை தமிழ் வழிக்கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 30ம்தேதி முதல்1ம்தேதிவரை தொடர் வேலைநிறுத்தப்போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதன்படி இன்று பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாநில செயலாளர் மகேந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 700 பெண்கள் உட்பட 1,300 போலீசார் கைது செய்தனர்.