பெரம்பலூர் : 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூரில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நேற்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 2011 சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்ததற்கு ஏற்ப தமிழக அரசு தன்பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நீக்கம் செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஊதிய நிர்ணயத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு இரண்டு விதமான ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். தாய்மொழியான தமிழ் பாடத்தை கடைசியாக வைத்துள்ள அரசாணையை திருத்தம் செய்து, தமிழ் பாடத்தை முதல் பாடமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 30, 31 மற்றும் 1 ஆம் தேதிகளில் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் ஜி. ராமமூர்த்தி, தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் ஒய். செல்வராஜ் ஆகியோர் தலைமையில், பெரம்பலூர் காமராஜர் வளைவிலிருந்து பாரத ஸ்டேட் வங்கி வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலர் இ. ராஜேந்திரன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் வையாபுரி உள்பட 450 ஆசிரியைகள், 400 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.