17th Anniversary Reconciliation Ceremony at Perambalur District Court Complex! The primary session of the district was presided over by a judge.

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் 17வது ஆண்டு சமரச விழா மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ. பல்கீஸ் தலைமையில், மகிளா நீதிமன்ற எஸ். கிரி , போலீஸ் எஸ்.பி. மணி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ். மலர்விழி, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தனசேகரன், குற்றவியல் தலைமை நீதிபதி எம். மூர்த்தி, சார்பு நீதிபதிவும், மாவட்ட சமரச மைய ஒருங்கிணைப்பாளர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஆர். லதா, சார்பு நீதிபதி ஐ. ஷகிலா, நீதித்துறை நடுவர்கள் ஆர். சங்கீதா சேகர், ஜி. முனிக்குமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி எம். ரவிச்சந்திரன், குன்னம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் வி. சிவகாமசுந்தரி ஆகியோர் முன்னிலையில் இன்று காலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தெரிவித்ததாவது:

சமரச மையம் என்பது சரிசெய்யும் மையமாகும். இந்த மையம் ஏப்ரல் 2005-ல் துவங்கப்பட்டு, இன்று 17-வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில் முதல் சமரச மையம் அமைக்கப்பட்டது. சென்னையில் 2005ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் அமைக்கப்பட்ட சமரச மையமே இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் சமரச மையம் ஆகும். சமரசம் என்பது ஒரு ஞானம் ஆகும். சமரசம் செய்யும்போது இருவரும் மனம் பொருந்தி விட்டுக் கொடுத்து தீர்வு காணப்படும். சமரச தீர்வு மையத்தில் காணப்படும் தீர்வுகளுக்கு மேல்முறையீடு; கிடையாது.

தமிழ்நாடு சமரச மையம், சென்னை உயர்நீதிமன்றத்தால் ஏற்படுத்தப்பட்டு செயல்படுகிறது. வழக்குத் தரப்பினர்கள், தம் எதிர்தரப்பினருடன் பேசி சமரசம் செய்துகொள்ள ஏதுவாய் நீதிமன்றம் இங்கு வழக்குகளை அனுப்புகிறது. இங்கு நன்கு பயிற்சியளிக்கப்பட்ட சமரசர்கள் வழக்கு தரப்பினர்கள், சுமூகமான வழக்கை முடித்துக் கொள்ள உதவுவார்கள். நீதிமன்றம் வழங்கும் இந்த சேவைக்கு வழக்குத்தரப்பினர்கள் எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை. தனிப்பட்ட முறையில் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்த தனியறைகள், காத்திருக்க இடவசதி முலியவை சமரச மையத்தில் உள்ளன.

சமரச முயற்சி தனியறையில் நடத்தப்பட்டு இங்கு நடப்பவை அனைத்தும் மற்றவருக்கு தெரிவிக்கப்படாமலும், நீதிமன்றத்தில் விவாதிக்கப்படாமலும் பாதுகாக்கப்படும். மிக எளிய முறையில், வேகமாகவும், பண விரயமில்லாமலும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தீர்வுகளை காண சமரசம் உதவுகிறது. இரு தரப்பினர்கள் தங்கள் உள்மனம் திறந்து தங்களுடைய கோபதாபங்களை தெரிவித்து எதிர்தரப்பின் நிலையை அறியவும் ஒரு வாய்ப்பாக அமையும். மேலும் மக்களுடைய பிரச்சினைகளுக்கு வேறு வழி தேடாமல் நீதிமன்றங்களை அணுக ஒரு தூண்டுகோலாகவும் அமையும்.

சமரச மையத்தில் முதலில் சமரசத்தைப் பற்றி தெளிவாகவும், வழக்கை முடித்துக்கொள்வதில் உள்ள நன்மைகளையும் எடுத்துக் கூறுவார்கள். இரு தரப்பினர்களுக்கும் உடனடி பொருளாதார நன்மை கிடைத்திடவும், செலவு, நேரம் சிரமங்களை குறைத்திடவும், மனஉளைச்சலிலிருந்து விடுதலை பெறவும், நடைமுறைக்கு ஏற்ற, இணைந்து செயல்படுகிற பலவிதமான தீர்வுகளையும் பெற முடியும். எனவே வழக்கு தரப்பினரும், எதிர்தரப்பினரும் இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சமரசத்தின் மூலம் வழக்கு சுமூகமாக தீர்க்கப்பட்டால், நீதிமன்ற கட்டணத்தை திரும்ப ஒப்படைக்க நீதிமன்றமே உத்தரவிடும் என மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ. பல்கீஸ் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கு சமரச தீர்வு மையம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு பேரணியினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்க தலைவர் இ.வள்ளுவன்நம்பி, வழக்கறிஞர்கள் அசோசியேசன் தலைவர் கே. திருநாவுக்கரசு, பார் அசோசியேசன் செயலாளர் எம். சுந்தரராஜன், வழக்கறிஞர்கள் அசோசியேசன் செயலாளர் எஸ். கிருஷ்ணராஜு, மானிட்டரிங் சப்-கமிட்டி மெம்பர் ஆர். ராதாகிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர்கள் துரை பெரியசாமி, பாலசுப்ரமணியன், குமாரசாமி, சீனிவாசன், அய்யம்பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!