2-day holiday for the banks: shortage currency increased risk
வங்கி, ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு நீடிக்கு நிலையில் நாளையும், நாளை மறுநாளும் வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் ஏடிஎம்களும் முடங்கும் அபாயம் உள்ளது.
மத்திய அரசு ரூ.1000, ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த 8ம் தேதி இரவு அறிவித்தது. அதைத் தொடர்ந்து இதனால் வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் பழைய நோட்டை மாற்றவும், பணத்தை எடுக்கவும் மக்கள் கூட்டம் அலைமோதியது. வங்கிகள், ஏடிஎம் மையங்களில் கூட்டம் குறையாததால், மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறையான கடந்த 12ம் தேதியன்று வங்கிகள் செயல்பட்டன. 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிக்கு வாரவிடுமுறை. ஆனால் அன்றும் வங்கிகள் வழக்கம் போல் செயல்பட்டன. இதே போல், கடந்த 19ம் தேதி 3வது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் செயல்பட்டன.
இதற்கிடையே, வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நேற்று முடிந்தது. எனினும், வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய மட்டும் அனுமதிக்கின்றனர். அதே சமயம், வாரந்தோறும் ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்படவில்லை. ஆனால், வங்கிகளில் பணம் தட்டுப்பாடு காரணமாக அதை கூட வழங்குவதில்லை. ஏடிஎம்களிலும் பணம் சில மணி நேரத்தில் தீர்ந்து விடுகிறது. இதனால், இன்றும் மக்கள் பணத்துக்காக கடும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் நாளை 4வது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை நாள் ஆகும்.
இதனால், நாளையும், நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை. இதனால் வங்கிகளில் பணம் எடுக்க முடியாமல் மக்கள் ஏடிஎம்களுக்கு செல்வார்கள். இதையடுத்து ஏடிஎம்களும் முடங்கும் அபாயம் உள்ளது. இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொது செயலாளர் வெங்கடாச்சலம் கூறியதாவது: வங்கிகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை. இதனால் வங்கிகள் 2 நாட்கள் இயங்காது. ரிசர்வ் வங்கியில் இருந்து குறைந்த அளவிலேயே வங்கி கிளைகளுக்கு பணம் அனுப்பப்படுகிறது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு போதுமான அளவு பணம் வழங்கமுடியவில்லை. இது போன்ற நிலை எப்போதும் நிலவியது கிடையாது.
அது மட்டுமல்லாமல் புதிய ரூ.2000 நோட்டை வாங்க யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், புதிய ரூ.500 நோட்டு வந்தால் சில்லரை தட்டுப்பாடு நீங்கும் என்று பார்த்தோம். ஆனால், ரிசர்வ் வங்கிக்கே குறைந்த அளவிலேயே ரூ.500 நோட்டுக்கள் வந்துள்ளன. அந்த பணம் வங்கிகளுக்கு குறைந்த அளவிலேயே வழங்கப்படுகிறது. அதுவும் முதலில் வருபவர்களுக்கு மட்டுமே புதிய ரூ.500 நோட்டுக்கள் கிடைக்கின்றன. இதனால் மற்றவர்களுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. வங்கி ஏடிஎம்கள் இன்னும் முழுமையாக செயல்பட 20 முதல் 30 நாட்கள் வரை ஆகும். வங்கிகளுக்கு இன்னும் 100 கோடி பணம் தேவைப்படுகிறது. அது வந்தால் மட்டுமே பணத்தட்டுப்பாடு நீங்கும். ரூ.100 நோட்டுக்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதுவும் குறைந்த அளவிலேயே வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.