2 Wheeler Collied; confrontation at the 10 th class student killed; Two people, including a 13-year-old boy in serious condition
பெரம்பலூர் அருகே உள்ள வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்த அலீப்ஹான் மகள் சமீரா (வயது 17), இவர் அதே ஊரிலுள்ள அரசுப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வந்தார். தற்போதைய ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டிலிருந்த மீரா தனது மாமன் ஜாஹீர் என்பவரின் மகன் சமீர் (13),என்ற சிறுவனை அழைத்து கொண்டு டி.வி.எஸ் சூப்பர் எக்ஸ்ஷெல் என்ற டூவீலரில் பக்கத்து கிராமமான தேவையூர் கிராமத்திலுள்ள உறவினர் ஒருவரது வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் வாலிகண்டபுரம் கிராமம் நோக்கி தேசியநெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் ரோட்டில் போக்குவரத்து விதியை மீறி எதிர் திசையில் வந்து கொண்டிருந்த போது, மங்கலமேடு கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் மகன் அண்ணாமலை (40), என்பவர் வாலிகண்டபுரத்திலிருந்து மங்கலமேடு நோக்கி ஸ்பிலிண்டர் பிளஸ்-ல் சென்ற போது எதிர்பாராத விதமாக இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் டூவீலர்களில் பயணித்த மீரா, அமீர், அண்ணாமலை ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து தனித்தனி ஆம்புலன்ஸ்சில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். இதில் கொண்டு செல்லும் வழியிலேயே மீரா பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். இதில் அண்ணாமலை மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக திருச்சி கொண்டு செல்லப்பட்டார்.
இது குறித்து தகவலறிந்த மங்களமேடு போலீசார், விபத்தில் படுகாயமடைந்தவர்களிடம் வாக்கு மூலம் பெற்று, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.